தாங்கள் விரும்பிய ஒன்று கிடைக்காத சந்தர்பத்தில் பொறுமையாக இருப்பவர்கள், அதை அடையும் போது பணிவாக இருப்பவர்கள், அது கைவிட்டு போகும் உறுதியாக இருப்பவர்கள் தான் அறிவாளிகள்._ இமாம் கஸ்ஸாலி

Sunday, November 6, 2016

வரலாற்றை மாற்றியமைத்த நாயகர்கள்.....வரலாற்று பதிவிலிருந்து..

அன்பும் பொறுமையும் இருந்தால் வாளும் போர்களமும் தேவைபடுவதில்லை(எதிரி வலியவந்து தாக்காதவரை)
அன்பினால்: இருள் வெளிச்சம் ஆகும்
அன்பினால்: கசப்பு இனிமை ஆகும்
அன்பினால்: வேதனை சுகமாகும் -
ஒரு நாள் காலைப் பொழுது. ஒரு பெரிய மூட்டையை சுமந்து கொண்டு ஒரு வயது முதிர்ந்த மூதாட்டி மக்கா நகரின் ஓரமாக தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே நபிகள் நாயகம் வந்தார்கள். பிறருக்கு உதவும் உள்ளம் கொண்ட நாயகம் வழமை போல அம்மூதாட்டியை அணுகி, “தாயே! நீங்கள் விரும்பினால் உங்கள் துணிமூட்டைகளை என்னிடம் தாருங்கள்! நான் அதை உங்களுக்காக சுமந்து வருகிறேன்” என்று சொன்னார்கள். “ரொம்ப நன்றி” என்று கூறி அம்மூதாட்டி துணி மூட்டையை அன்னவர்களிடம் கொடுத்தாள்.
“மக்காவை விட்டு எங்கே அம்மா போகிறீர்கள்?” என்று நபிகள் நாயகம் கேட்டார்கள். தன்னோடு உரையாடுவது முஹம்மது நபிகள் என்பதை அறியாத அம்மூதாட்டி “மக்கமா நகரில் முஹம்மது என்கின்ற ஒரு மனிதர் வந்துள்ளாராம். அவர் இறைவனின் இறுதித் தூதராம். அனைவரும் அவரது நேரான வழியை பின்பற்ற வேண்டும் என்கிறாராம்.
நான் ஒரு யஹூதிப் பெண். எனது மார்க்கத்தை நான் எப்படி விட முடியும்? எங்களது ஜனங்கள் அவரைப் பற்றி பலதும் கூறுகிறார்கள். அவர் இருக்கும் மக்காவில் வாழ எனக்கு விருப்பமில்லை. அதுதான் ஊரை விட்டே கிளம்பி விட்டேன்” என அம்மூதாட்டி கூறினார். அதைக் கேட்டு கொண்டு அமைதியாக வந்தார்கள். வழியெல்லாம் அம்மூதாட்டி அவரை பற்றி முன்பு கூறியது போன்று கூறி கொண்டு வந்தார்.
பொறுமையின் சிகரமான நபிகள் நாயகம் பொறுமையோடும் புன்முறுவல் பூத்தவர்களாகவும் நடந்து சென்றார்கள். அப்போது அம்மூதாட்டி நபிகள் நாயகம் அன்னவர்களின் சிரிப்பில் பிரகாசத்தையும் முகத்தில் பணிவையும் அவதானித்தார்.
கடைசியில் அம்மூதாட்டி சொன்ன இடம் வந்தது. மூட்டையை இறக்கி அம்மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு “நான் போய் வருகிறேன் தாயே” என்று நபிகள் நாயகம் விடைபெற்றார்கள். மிகவும் மகிழ்ச்சியடைந்த அம்மூதாட்டி அன்னவர்களை பார்த்து “இந்த சில்லறைகளை வைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறி சில திர்ஹம்களை நீட்டினார். அதற்கு, நபிகள் நாயகம் “வேண்டாம் அம்மா, நான் இதனை பணத்திற்காக செய்யவில்லை” என கூறி உறுதியாக மறுத்துவிட்டார்கள்.
கொள்ளைக் கூட்டம் நிறைந்த இந்த ஊரில் இப்படியும் ஒரு நல்ல மனம் கொண்ட மனிதரா? என்று வியந்த அம்மூதாட்டி “கருணை உள்ளம் படைத்தவரே, உங்கள் பெயரையாவது சொல்லிவிட்டு செல்லுங்கள்” என்று கூறினார். அப்போது நற்குணத்தின் தாயகம் புன்முறுவல் பூத்தவர்களாக “நீங்கள் யாருடைய போதனைக்குப் பயந்து இந்த ஊரைவிட்டு போகிறீர்களோ, அந்த முஹம்மது நான்தான்” என்று கூறினார்கள். அதனை கேட்ட அம்மூதாட்டி அதிசயித்து நின்றார். அவரின் கண்கள் கண்ணீரை சொரிந்தன.
இவ்வளவு நற்குணம் படைத்த ஒருவரையா சரியாக புரிந்துக்கொள்ளாமல் நான் தப்பாக பேசினேன் என்று உள்ளத்தால் அழுதார். நிச்சயமாக நற்குணத்தின் சிகரமான இந்த புனிதர் வழிகெடுப்பவராக இருக்க முடியாது என்பதை உணர்ந்த அம்மூதாட்டி அடுத்த கணம் இஸ்லாத்தைத் தழுவினார். இதில் படிக்க வேண்டிய பல பாடங்கள் உள்ளன.
1. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மூதாட்டிக்கு உதவும்போது அவளது சாதி சமயத்தைப் பார்க்கவில்லை. அங்கே மதத்தை தாண்டி மனிதாபிமானம் என்றால் என்ன என்பதை உலகிற்கு எடுத்து சொன்னார்கள்.
2. தன்னை பற்றி அம்மூதாட்டி கூறிய வசை மொழிகளை பெருந்தன்மையோடு சகித்துக் கொண்டார்கள். இதில் பொறுமை, சகிப்புத்தன்மை, மற்றவரை மன்னிக்கும் மனப்பான்மை ஆகியவற்றை உலகிற்கு எடுத்து காட்டினார்கள்.
3.கடைசியாக! தன்னை எதிரியாக பார்த்த ஒரு பெண்ணுக்கு நபிகள் நாயகம் திருப்பி கொடுத்தது - “அன்பு”
கடைசியில் எதிரி அன்பரானார்.

Tuesday, December 8, 2015

அது ஒரு காகம்! (படிப்பினை கதை)


வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை ஓதிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.
திடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது.
என்ன இது?” என்று கேட்டார் முதியவர்.
லேப்-டாப்பிலிருந்து கண்களை விளக்கிய மகன் சொன்னார், “அது ஒரு காகம்”
சில நிமிடங்கள் கழிந்தன. அந்த முதியவர் மீண்டும் கேட்டார், “என்ன இது?”
இப்பத்தானே சொன்னேன், அது ஒரு காகம்” என்றார் மகன்.
சிறிது நேரம் கழித்து மூன்றாம் முறையாக அந்த முதியவர் தன் மகனிடம் கேட்டார், “என்ன இது?”
சற்று எரிச்சலான குரலில் மகன் பதிலளித்தார், “அது ஒரு காகம், காகம்!”
இன்னும் சிறிது நேரம் கழித்து அந்தத் தந்தை நான்காவது முறையாக அதே கேள்வியைக் கேட்டார், “என்ன இது?”
மகனோ பொறுமையை இழந்து விட்டார். தனது தந்தையைப் பார்த்து அவர் கத்தினார், “அதே கேள்வியை ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்கீங்க? எத்தனை முறைதான் பதில் சொல்வது, ‘அது ஒரு காகம்’ என்று? இதைக்கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா?”
முதுமை அடைந்து விட்டதால் மீண்டும் சிறு குழந்தை போல ஆனதாலோ என்னவோ, தந்தையின் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் தென்படவில்லை. அவருக்கருகில் அமர்ந்து அமைதியாகக் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த அவரது மனைவி எழுந்து தமது அறைக்குச் சென்று திரும்பினார். அவரது கையில் மிகப் பழைய நாட்குறிப்பு ஒன்று இருந்தது.
அது அந்தத் தந்தையின் நாட்குறிப்பு. தன் மகன் பிறந்ததிலிருந்து அவர் அதில் எழுதி வந்தார். அதில் ஒரு பக்கத்தைத் திறந்தத் தாய் அதைத் தன் மகனிடம் கொடுத்து படிக்கச் சொன்னார்.
அந்தப் பக்கத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது;
எனது சின்னஞ்சிறு மகன் என்னுடன் உட்கார்ந்திருக்கும்போது சன்னலில் ஒரு காகம் வந்தமர்ந்தது. என் மகன் ‘அது என்ன’ என்று 23 தடவைகள் கேட்டான். ‘அது ஒரு காகம்’ என்று நான் 23 தடவைகளும் பதில் சொன்னேன். அவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியை கேட்டபோதும் நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன். அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்வி என்னை எரிச்சலடையச் செய்யவில்லை. அதற்கு மாறாக, கள்ளங்கபடமற்ற அச்சிறு குழந்தையின் மீது எனக்கு பிரியம்தான் அதிகமானது”.
இதைப் படித்த மகனின் கண்கள் பனித்து விட்டன. 23 தடவை அதே கேள்வியை கேட்டபோதும் தன் மீது பாசமழை பொழிந்த தன் தந்தை மீது எரிச்சலடைந்ததற்காக அவரது மனம் வருந்தியது. திருமறை குர்ஆனின் கீழ்க்கண்ட போதனைகளும் அவரது நினைவுக்கு வந்தன.

(
நபியே!) உமதிறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ, அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட போதிலும் உம்மிடமிருந்து அவர்களை வெருட்டவும் வேண்டாம், அவர்களை (நிந்தனையாக)ச் ‘சீ’ என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசும்.
அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றி, என்
இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து, பரிபாலித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்அன் 17:23,24)

தமது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் உபதேசித்தோம்.
அவனுடைய தாய் அவனைச் சிரமத்துடன் (கர்ப்பத்தில்) சுமந்திருந்து, சிரமத்துடனே அவனை ஈன்றெடுத்தாள். அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்ததும், அவனுக்குப் பால் குடியை மறக்கடித்ததும் முப்பது மாதங்களாகும். முடிவில் அவன் தனது வாலிபத்தை அடைந்து, நாற்பது ஆண்டு களை அவன் அடைந்திட்ட பொழுது, “என்னுடைய ரப்பே! நீ எனக்கும், எனது பெற்றோருக்கும் அருளிய உனது அருட் கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ எதனைப் பொருந்திக் கொள்வாயோ அத்தகைய நற்செயல்களை நான் செய்வதற்கும், எனக்கு உள்ளுணர்வை உதிப்பாக்குவாயாக! என் சந்ததியினரை எனக்கு நல்லிணக்கமாக்கி வைப்பாயாக! நிச்சயமாக நான் உன் பக்கமே (தவ்பாச் செய்து) மீண்டு விட்டேன். நிச்சயமாக நான் (உனக்கு வழிப்படுகின்ற) முஸ்லிம்களில் உள்ளவனாக இருக்கின்றேன்” என்று அவன் கூறுகின்றான். (அல் குர்ஆன் 46:15)

இவரைப்போல ஒரு அண்ணன்..!

காலித்தின் அண்ணன் அவனுக்கு ஒரு புத்தம் புதிய காரை பெருநாள் பரிசாக அளித்திருந்தார். பெருநாளுக்கு முதல் நாள் காலித் அவனது அலுவலகத்திலிருந்து வெளியே வந்தபோது ஒரு சிறுவன் அவனது காரைச் சுற்றிச் சுற்றி வந்து ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பது அவனது தோற்றத்தியே தெரிந்தது.

காலித்தைப் பார்த்ததும்
, “இது உங்கள் காரா அங்கிள்?” என்று கேட்டான் அந்தச் சிறுவன். ‘ஆமாம்’ என்று தலையசைத்த காலித், “என் அண்ணன் எனக்கு பெருநாள் பரிசாக வாங்கித் தந்தது இது” என்று பெருமிதமாகக் கூறினான். சிறுவனின் கண்கள் விரிந்தன.
உண்மையாகவா சொல்கிறீர்கள்? உங்களுக்கு பைசா கூடச் செலவில்லாமல் இந்த அழகான காரை உங்கள் அண்ணனே வாங்கித் தந்தாரா? இவரைப் போல ஒரு அண்ணன்….” என்று ஏதோ சொல்ல வாயெடுத்த சிறுவன் சற்றுத் தயங்கினான். ‘இவரைப்போல ஒரு அண்ணன் எனக்கும் இருந்தால் நன்றாக இருக்குமே’ என்று அந்தச் சிறுவன் சொல்ல நினைக்கிறான் என்று யூகித்தான் காலித். ஆனால் அந்தச் சிறுவன் தொடர்ந்துச் சொன்ன வார்த்தைகள் அவனை அப்படியே உலுக்கி விட்டது.

இவரைப் போல ஒரு அண்ணனாக நான் இருந்தால் எப்படி இருக்கும்?” என்று அந்தச் சிறுவன் சொன்னதைக் கேட்டு வாயடைத்துப் போனான் காலித்.
இந்தக் காரில் ஒரு ரவுண்டு போகலாம்.. வருகிறாயா?” என்று காலித் கேட்டபோது சந்தோஷமாக ஏறிக் கொண்டான் அச் சிறுவன். சிறிது தூரம் போய்விட்டு திரும்பியபோது, “அங்கிள், இந்தக் காரில் என் வீட்டிற்கு என்னை அழைத்துச் செல்ல முடியுமா?” என்று சற்றுத் தயக்கத்துடன் கேட்டான் அவன். காலித் புன்னகைத்துக் கொண்டான். ‘சின்னப் பையன் தானே..! ஒரு புதிய காரில் தான் சவாரி செய்ததை தனது தெருத் தோழர்களிடம் பெருமையாக காட்ட நினைக்கிறான் போலிருக்கிறது’ என்று நினைத்தவனாக “ஓ.. போகலாமே!” என்றான் காலித். மீண்டும் அவனது எண்ணம் தவறாகிப் போனது.
அதோ.. அந்த வீட்டு வாசல் படிக்கருகில் காரை நிறுத்துங்கள் அங்கிள்” என்று சொன்ன அந்தச் சிறுவன், “கொஞ்ச நேரம் பொறுங்கள். இதோ வந்து விடுகிறேன்” என்று சொல்லி விட்டு காரை விட்டிறங்கி அந்த வீட்டிற்குள் ஓடிப்போனான். சிறிது நேரத்தில் அவன் திரும்பி வந்தபோது அவனது முதுகில் இன்னொரு சிறுவனை அவன் சுமந்துக் கொண்டிருந்தான்.
நடக்க இயலாத அந்தச் சிறுவனை வீட்டு வாசல் படியில் உட்கார வைத்த அவன், “தம்பி! இதோ பார்த்தாயா.. நான் சொன்ன கார் இதுதான்! இந்த அங்கிளின் அண்ணன் அவருக்கு பெருநாள் பரிசாக வாங்கித் தந்தாராம். ஒரு பைசா கூடச் செலவில்லாமல் இவருக்கு இந்தக் கார் கிடைத்திருக்கிறது. நான் வளர்ந்து பெரியவனானவுடன் இதே போல ஒரு காரை உனக்கு வாங்கித் தருவேன். கடைத்தெருவில் நான் பார்த்ததாகச் சொல்வேனே, அந்த அழகான பொருள்களையெல்லாம் நீ அந்தக் காரில் போய் நேரிலேயே பார்க்கலாம்” என்று ஆவலாகச் சொன்னான்.

காரை விட்டிறங்கிய காலித் அந்தச் சிறுவனைத் தூக்கி காரின் முன்
இருக்கையில் உட்கார வைத்தான். அவனது அண்ணனும் பின்னிருக்கையில் ஏறிக்கொள்ள, கண்கள் கலங்கியிருந்த அம்மூவரும் சந்தோஷமாக நகர்வலம் சென்றார்கள்.

ஒரு இறைநம்பிக்கையாளர் தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்ப வேண்டும்” என்ற நபி (ஸல்) அவர்களின் போதனையின் உண்மையான பொருளை அன்று புரிந்துக் கொண்டான் காலித்.

மார்ட்டின் லூதர் கிங் வரலாறு



மனுகுல நாகரிகத்திற்கு முரண்பாடான சில விசயங்கள் உலகின் ஏதாவது ஒரு மூலையில் எப்போதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. விந்தை என்னவென்றால் எப்போது நாகரிகம் தோன்றியதோ அப்போதே அநாகரிகமும் தோன்றத் தொடங்கி விட்டன. தொன்று தொட்டே இருந்து வந்த அநாகரிகங்களில் ஒன்று கருப்பினத்தவரை கொத்தடிமைகளாக நடத்தியது. ஆபிரகாம் லிங்கன் என்ற உன்னத மனிதனின் முயற்சியால் கருப்பினத்தவரின் அடிமைத்தலை அறுத்தெரியப்பட்டது என்பதை நாம் அறிவோம். ஆனால் அமெரிக்காவில் அடிமைத்தலை அகன்றதே தவிர அங்கு கருப்பினத்தவருக்கு சம உரிமை மறுக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டிலும் நிலவிய அந்த அவலத்தைப் போக்க அரும்பாடுபட்ட ஒருவரைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர்தான் அகிம்சை வழியைப் பின்பற்றி கருப்பினத்தவர்களின் சம உரிமைக்காகப் போராடி உயிர் துறந்த மார்ட்டின் லூதர் கிங்.  
1929-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் நாள் அமெரிக்காவின் அட்லாண்டா (Atlanta) நகரில் பிறந்தார் மார்ட்டின் லூதர் கிங். பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் அவர் சமயக்கல்வி கற்றார். பின்னர் அவர் ஒரு ( Dexter Avenue Baptist Church) பாப்டிஸ்ட் பாதிரியானார். கருப்பினத்தவர்களுக்கு சம உரிமை மறுக்கப்பட்ட அமெரிக்க சூழ்நிலை அவரது மனதை எப்போதுமே அரித்துக் கொண்டிருந்தது. இருபதாம் நூற்றாண்டில் அறிவியல் முன்னேற்றத்தில் உலகுக்கே முன்மாதிரியாக விளங்கிய அமெரிக்காவில் அதன் குடிமக்களுக்கு சரிசமமாக வாழும் சூழ்நிலை இல்லை என்பதுதான் வேதனையான உண்மை. கருப்பினத்தவர்களை தீண்டத்தகாதவர்களாக பார்த்தனர் வெள்ளையர்கள். உணவகங்கள், பேருந்துகள், பொழுதுபோக்கு இடங்கள் என எந்த பொது இடத்திலும் கருப்பர்களுக்கு என்று தனி இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த இடங்களை மட்டும்தான் கருப்பர்கள் பயன்படுத்த வேண்டும். 
ஒதுக்கப்பட்ட இடங்களை விட்டு வெள்ளையர்களின் இடங்களுக்கு அவர்கள் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? அந்த அநாகரிகமான விதிமுறைகளை மீறுபவர்களுக்கு சிறை தண்டனை நிச்சயம். எவ்வுளவு காலம்தான் பொறுத்துக்கொள்வது. 1955-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் தேதி கருப்பர்களின் பொறுமை எல்லைக் கடக்கும்படியான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அந்த தினம் ரோஸா பார்க்ஸ் (Rosa Parks) என்ற கருப்பின பெண் ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்தார். ஒரு நிறுத்தத்தில் சில வெள்ளையர்கள் அதே பேருந்தில் ஏறினர். அப்போது அவர்கள் அமர இருக்கை இல்லாததால் ரோஸா பார்க்கை அந்த இருக்கையை விட்டு எழுந்திருக்குமாறு அதட்டினார் பேருந்து ஓட்டுனர். எழுந்திருக்க மறுத்ததால் ரோஸா பார்க் கைது செய்யப்பட்டார். பல ஆண்டுகள் அவமானங்களைத் தாங்கிக்கொண்டிருந்த கருப்பினத்தவர்கள் இம்முறை விடுவதாக இல்லை. ரோஸா பார்க் சம்பவத்தைக் கண்டித்து சுமார் 50000 கருப்பர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடும் நடத்தினர். இருப்பினும் கருப்பினத்தவர்களின் கொந்தளிப்பை அப்பட்டமாக வெளிப்படுத்தும் ஒரு ஆர்ப்பாட்டமாக அது அமைந்தது.
மார்ட்டின் லூதர் கிங்கிற்கு மகாத்மா காந்தியின் மீதும், அவரது அகிம்சைப் போராட்டத்தின் மீதும் அளவு கடந்த மரியாதை உண்டு. அன்னல் காந்தியின் உருவப்படத்தை அவர் வீட்டில் மாட்டி வைத்து வணங்கினார். காந்தியடிகளின் வழிகளில் அதிக நம்பிக்கை வைத்த அவர் தனது போராட்டங்களில் வன்முறை தலையெடுக்காமல் பார்த்துக் கொண்டார். சம உரிமைக்கோரும் இயக்கங்களில் அவர் மும்முரமாக ஈடுபட்டார். தனது இயக்கத்தை மிக கன்னியமாக அவர் நடத்திய முறையைப் பார்த்து சில வெள்ளையினத்தவரும்கூட அவரைப் பாரட்டினர். ஆனால் பல எதிரிகள் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர். அவரது வீட்டிற்கெதிரே குண்டுகள் வீசினர். அமெரிக்காவின் ரகசிய போலீசார் அவரை தற்கொலை செய்துகொள்ளுமாறு மிரட்டியதாக ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. ஆனால் தனது அமைதிப் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்தார் லூதர் கிங்.
அறவழியில் போராடுவது பற்றி அறிந்து கொள்ள 1959-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார் லூதர் கிங். அங்கு ஒருமாத காலம் தங்கியிருந்து காந்தியடிகளோடு பழகிய தலைவர்களிடம் அகிம்சை போராட்டத்தைப் பற்றி கேட்டறிந்தார். மிகச்சிறப்பாகவும் உருக்கமாகவும் பேசக்கூடியவர் லூதர் கிங் அவரது பேச்சுகள் எழுச்சியூட்டியதே தவிர வன்முறையைக் கிளறியது இல்லை. 1963-ஆம் ஆண்டு வாஷிங்டெனில் மிகப்பெரிய அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்தார் லூதர் கிங். சுமார் இருநூற்றி ஐம்பதாயிரம் பேர் அங்கு திரண்டனர். அந்த அமைதிப் பேரணியில்தான் வரலாற்று சிறப்புமிக்க சொற்பொழிவாற்றினார் மார்ட்டின் லூதர் கிங். உலகை மெய் சிலிர்க்க வைத்த பேச்சில் அவர் இவ்வாறு கூறினார்.....
"எனக்கு ஒரு கனவு உண்டு ஒருநாள் இந்த தேசத்தில் என்னுடைய நான்கு பிள்ளைகளும் அவர்களுடைய தோல் நிறத்தின் அடிப்படையில் அல்லாமல் அவர்களுடைய குணத்தின் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும். என்றாவது ஒருநாள் வெள்ளையின சிறுவர்களும், கருப்பின சிறுவர்களும் கையோடு கை கோர்த்து நடக்க வேண்டும்".
அந்தப் பேரணி நடந்த அடுத்த ஆண்டே 1964-ஆம் ஆண்டு சம உரிமைக்காகப் பாடுபட்ட லூதர் கிங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. வேறு வழியில்லாமல் 1965-ஆம் ஆண்டு கருப்பினத்தவர்களுக்கு ஓட்டுரிமை அளித்தது அமெரிக்க அரசாங்கம் அதனைத் தொடர்ந்து கருப்பினத்தவர்களும், வெள்ளையினத்தவர்களும் சமம் என்பதைப் பிரகடணப்படுத்தும் மனித உரிமை சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றியது. கருப்பினத்தவர்களுக்கு சம உரிமை பெற்றுத்தரும் இயக்கத்தில் கருப்பினத்தவர்கள் மட்டுமே இடம்பெற்றால் பலன் இருக்காது என்று நம்பிய லூதர் கிங் மற்ற இனத்தவரையும் தனது இயக்கத்தில் சேர்த்துக்கொண்டார். எல்லோரின் மனங்களும் மாறினால்தான் சம உரிமைக்கு வாய்ப்பு உண்டு என்று அவர் நம்பினார். ஆனால் மற்ற இனத்தவரும் அவரது இனத்தில் சேர்ந்தது குறித்து இன ஒதுக்கல் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்தனர். அந்த ஆத்திரம்தான் லூதர் கிங்கின் உயிருக்கு உலை வைத்தது. 
டென்னசியில் (Tennessee) 1968-ஆம் ஆண்டு ஏப்ரம் 4-ஆம் நாள் ஒரு வெள்ளையினத் தீவிரவாதி லூதர் கிங்கை துப்பாக்கியால் சுட்டான். அந்த இடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது அப்போது அவருக்கு வயது 39. இந்தியாவில் வென்ற அகிம்சை அமெரிக்காவிலும் வென்றது. ஆனால் காந்தியடிகளுக்கு கிடைத்தது போலவே மார்ட்டின் லூதர் கிங்கிற்கும் துப்பாக்கி குண்டுதான் வெகுமதியாக கிடைத்தது. லூதர் கிங்கின் மறைவிற்கு உலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. அவரை கருப்பு காந்தி என்றும் அழைத்தது. மார்ட்டின் லூதர் கிங் என்ற அந்த மாமனிதனின் நினைவாக அமெரிக்காவில் ஜனவரி மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமை 'மார்ட்டின் லூதர் கிங் தினம்' என்று அனுசரிக்கப்படுகிறது. அன்று அமெரிக்கா முழுவதும் விடுமுறை நாள். 
சமூக அநீதிகளை எதிர்த்து தைரியமாக போராடியவர்களின் உயிர்களை சில நாச சக்திகள் அழித்தாலும் வரலாற்றில் அவர்களுக்கென்று உள்ள இடத்தை யாராலும் அழிக்க முடியாது. அகிம்சை வெல்லும் என்பதை இந்தியாவில் நிரூபித்தார் காந்தியடிகள். மார்ட்டின் லூதர் கிங் அதே உண்மையை அமெரிக்காவில் நிகழ்த்திக் காட்டினார். லூதர் கிங்கைப் போல் அகிம்சை என்ற அறவழியில் சமூக அநீதிகளை அழிக்க முனைவோருக்கு நிச்சயம் வரலாறும், அந்த வானமும் வசப்படும்.
After Pasting both code Save Your Template Settings.